ஹனிமூனுக்கு துபாய் வந்தவர்.. தங்கத்தை காதலியாக்கி.. இன்று அமீரகத்தில் பெரும் செல்வந்தர்
சென்னை:
பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட மும்பைக்காரரான பிரோஸ் மெர்ச்சண்ட்.. வறுமையை வென்று துபாயில் பியூர் கோல்டு நிறுவனத்தின் அதிபராகவும், பெரும் கோடீஸ்வரரராகவும் உருவானது எப்படி என்பதை பார்ப்போம்.ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் பிரோஸ் மெர்ச்சண்ட் (வயது 66) பூயர் கோல்ட் நகைக்கடையின் உரிமையாளர் ஆவார். இவர் ஒரு காலத்தில் மும்பையில் மிகவும் நெரிசலான குடிசைப்பகுதியில் 100 சதுர அடி வீட்டில் 11 பேரில் ஒருவராக வாழ்ந்தார். ஆனால் இன்று துபாயின் பாம் ஜுமேராவில் வானமே வாயடைத்து போய் பார்க்கும் ஆடம்பர மாளிகையில் வாழ்கிறார். துபாயின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராகவும், ஏழைகளுக்கு உதவி செய்வதில் கர்ணனாகவும் இருக்கிறார்..
ப்யூர் கோல்ட் ஜூவல்லர்ஸ் நிறுவனரும் தலைவருமான பிரோஸ் மெர்ச்சண்ட்டின் சின்ன வயது வாழ்க்கை மிக கடினமாக இருந்தது. அவர் ஊடகம் ஒன்றுக்கு சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் கூறும் போது, எனது தந்தை பெயர் குலாம் உசேன், ரியல் எஸ்டேட் புரோக்கராகவும், என் தாய் மாலெக்பாய் இல்லத்தரசியாகவும் இருந்தார். எங்கள் வீட்டில் மொத்தம் 11 பேர். அந்தக் குடும்பத்தில் சம்பாதித்த ஒரே ஆள் என்றால் என் தந்தை ஹுசைன்.மும்பையின் பீண்டி பஜாரின் ‘இமாம்வாடா’ குடிசைப்பகுதி வீட்டில் 100 சதுர அடி அறைக்குள் 11 பேர் வசித்து வந்தோம்.. ஒரு சமையலறை அதில் தான் எங்கள் வாழ்க்கைக்கான இடம் இருந்தது. எங்கள் வீட்டில் கழிப்பறைகள் அல்லது குளியல் அறைகள் இல்லை. இதற்காக நாங்கள் வெளியே செல்ல வேண்டியது இருந்தது
மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால், எங்கள் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் போராட்டமாகவே இருந்தது. நான் என் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை. அதேநேரம் என் தந்தைக்கு மிகவும் நெருக்கமான குழந்தை நான். அவர் என்னை எங்கு அழைத்துச் சென்றாலும் நான் அவரது கையைப் பிடித்துக் கொண்டு செல்வேன்.
என் தந்தை, எங்கள் போராட்டமான வறுமை நிறைந்த வாழ்க்கையை இரக்கத்துடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்ள எனக்குக் கற்றுக் கொடுத்தார். ஒவ்வொரு முறையும் நான் வாழ்க்கையில் பெரிய இடர்களை சந்திக்கும் போது எல்லாம் , அதில் என்ன புதிதாய் கற்று வலிமையாக மாற வேண்டும் என்பதை கண்டறிய சொல்வார். அய்யோ இப்படி ஏழைகளாக பிறந்துவிட்டோமே என்று எங்களை பார்த்து நாங்களே பரிதாபம் தேட விரும்பவில்லை, மாறாக நாங்கள் வாழ்க்கையை தொடர வேண்டியிருந்தது.