புதிய தொழில் முனைவோருக்கு கடன்.. லட்சங்களில் கிடைக்கும் மானியம்.. கோவை அதிகாரி விளக்கம்
சென்னை:
புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் (நீட்ஸ்) தொழில் தொடங்க 20 நிறுவனங்களுக்கு ரூ.1 கோடியே 78 லட்சம் மானியத்துடன் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கோவை மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முக சிவா கூறினார். அதேபோல் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (யு.ஒய்.இ.ஜி.பி.) தொழில் தொடங்க 53 பேருக்கு ரூ.69 லட்சம் மானியத்துடன் கடன் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.
புதிய தொழில் முனைவோருக்கு தமிழக அரசு கடன் உதவி செய்கிறது. அதாவது கிட்டத்தட்ட வட்டியில்லாத கடன் என்கிற அளவில் வட்டி மானியத்துடன் கடன் வழங்குகிறது. அவர்கள் வாங்கும் கடன் தொகையை நல்ல விதமாக பயன்படுத்த தொழில் தொடங்கி முன்னேறி தொழில் அதிபர்களாக வர வேண்டும் என்று அரசு இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு தொழில்களை தொடங்க தமிழக அரசு கடன் உதவி வழங்குகிறது.
தமிழக அரசு மட்டுமல்ல, மத்திய அரசுமே சிறுகுறு தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கில் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. அதேபோல் பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் கலைஞர் கைவினைத்திட்டத்தில் வட்டியில்லா கடன் உதவியும் வழங்கப்படுகிறது. இந்த கடன் உதவிகள் பற்றி முழு விவரம் அறிய உங்கள் மாவட்டத்தில் உள்ள தொழில் மையத்தை அணுக வேண்டும்.
கோவை மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முக சிவா வெளியிட்ட தகவலின் படி,” புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் (நீட்ஸ்) தொழில் தொடங்க 20 நிறுவனங்களுக்கு ரூ.1 கோடியே 78 லட்சம் மானியத்துடன் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்க 46 நிறுவனங்களுக்கு ரூ.3 கோடியே 83 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.