புதுமை, தற்சார்புடன் தேசத்தை கட்டமைக்க வேண்டும்: ஐஐடி நிகழ்ச்சியில் கவுதம் அதானி வலியுறுத்தல்
சென்னை:
ஐஐடி காரக்பூரில் நடந்த பவள விழா நிகழ்வில் பேசிய தொழில் அதிபர் கவுதம் அதானி, மாணவர்கள் ‘புதிய சுதந்திரப் போராளிகளாக’ மாற வேண்டும் என்றும், கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை என்றும் கூறினார். புதுமை, தற்சார்புடன் தேசத்தை கட்டமைக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஐஐடி காரக்பூரில் நடந்த பவள விழா நிகழ்வில், இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான கவுதம் அதானி கலந்து கொண்டு பேசினார். இந்தியாவின் தொழில் நுட்ப பயணத்தை இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக விவரித்த கவுதம் அதானி, இந்த பயணம் புத்தாக்கம் (இனோவேஷன்) மற்றும் தன்னம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றார்.
சுதந்திரப் போராளிகளாக மாற வேண்டும்
மாணவர்கள் ‘புதிய சுதந்திரப் போராளிகளாக’ மாற வேண்டும் என்றும், கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். 1930-களில் திரிதிப் குமார் சவுத்ரி போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிறைவைக்கப்பட்ட காரக்பூர் ஹிஜ்லி சிறையின் பாரம்பரியத்தை அதானி தனது உரையில் நினைவு கூர்ந்தார். கவுதம் அதானி மேலும் கூறியதாவது:-
1947-ல் காலனி ஆதிக்கச் சங்கிலிகளை இந்தியா உடைத்தெறிந்தாலும், இறக்குமதி செய்யப்பட்ட குறைக்கடத்திகள், வெளிநாட்டு எண்ணெய், எல்லை தாண்டிய தரவுப் பரிமாற்றங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் போன்ற புதிய சார்புநிலைகள் இன்றும் தொடர்கிறது. இன்றைய போர்கள் கண்ணுக்குத் தெரியாதவை. அவை அகழிகளில் அல்ல, சர்வர் பண்ணைகளில் நடக்கின்றன. ஆயுதங்கள் துப்பாக்கிகள் அல்ல, அல்காரிதம்கள். சாம்ராஜ்யங்கள் நிலத்தில் அல்ல, தரவு மையங்களில் கட்டமைக்கப்படுகின்றன.
ஆழமான ஒத்துழைப்பு தேவை
எனவே, புதுமை, குறியீடு, மற்றும் புதிய யோசனைகளே இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் நவீன கால ஆயுதங்கள்” என்று பேசினார். மேலும், செயற்கை நுண்ணறிவு குறித்து பேசிய அதானி, ஏஐ ஆதிக்கம் செலுத்தும் உலகில், விலை அனுகூலங்கள் மறைந்துவிடும் என்றும், அறிவுசார் சொத்துரிமை மற்றும் பெரிய அளவிலான கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் சிறந்து விளங்கும் நாடுகள் மட்டுமே வெற்றி பெறும் என்றும் அவர் எச்சரித்தார்.
பட்டதாரிகளை மட்டும் உருவாக்குவதைத் தாண்டி, இந்தியாவை மேம்படுத்துவதற்குத் தேவையான ‘புத்திசாலித்தனமான தேசபக்தர்களை’ உருவாக்க கல்வி நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்திய நிறுவனங்கள் புதுமைகளில் பின்தங்கிவிட்டதை ஒப்புக்கொண்ட அதானி, பல்கலைக்கழகங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையே ஆழமான ஒத்துழைப்பு தேவை என்றார்.