தமிழகத்தில் 4-ல் ஒருவருக்கு நீரிழிவு நோய்! அதிகரிக்கும் சர்க்கரை நோய்! ஆய்வுகளில் ஷாக்!
சென்னை:
தமிழகத்தில் 4 பேரில் ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. தமிழகத்தில் 23 சதவீதம் பேர் நீரிழிவு பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் என்ஐஇ ஆய்வு சொல்கிறது.
இந்த கணக்கை பார்த்தால் தமிழகத்தில் 4 பேருக்கு நீரிழிவு நோய்க்கான பரிசோதனையை நடத்தினால் அவர்களில் ஒருவருக்கு கட்டாயம் இந்த நோய் இருக்கும் என்று தெரியவந்திருக்கிறது.
2020 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் 18 சதவீதமாக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டு 23 சதவீதமாக உயர்ந்துவிட்டது. வெறும் 4 ஆண்டுகளில் 5 சதவீதம் பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு வேளை 2028-ஆம் ஆண்டு இந்த ஆய்வுகள் நடத்தினால் எவ்வளவு அதிகரித்திருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. சர்க்கரை நோய் என்பது இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு கூட வந்துவிடுகிறது.
அது போல் குழந்தை பிறகும் போது பிரசவ கால நீரிழிவு நோய் ஏற்படுகிறது. பொதுவாக இந்த நீரிழிவு ஏற்பட காரணம் இன்றைய உணவு பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி செய்யாதது, வாழ்வியல் மாற்றம் உள்ளிட்டவை ஆகும்.ரத்த அழுத்தத்தை போல் சர்க்கரை நோயும் சைலண்ட் கில்லர் என சொல்வதுண்டு. அதுபோல் மரபு வழியிலும் இந்த நோய் பரவுகிறது. எனவே சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதை குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது சோதனை செய்து கொள்வது நல்லது.
சர்க்கரை நோய் சோதனை எடுக்கும் போது வெறும் வயிற்றில் 90, சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 120 இருக்க வேண்டும். கர்ப்பிணி என்றால் 140 வரை இருக்கலாம். இதில் 130, 140 என இருந்தால் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இதையடுத்து உணவு கட்டுப்பாடு, நடைபயிற்சி உள்ளிட்டவைகளை செய்து முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். இதை ஒரே நாளில் முடிவு செய்துவிட முடியாது. முன்னாள் இரவு என்ன சாப்பிட்டோம் என்பதை பொருத்துக் கூட அடுத்த நாள் சர்க்கரை நோயில் மாற்றம் இருக்கும்.
சர்க்கரை நோய் வந்தால் மாரடைப்பு வந்தாலும் வலியே தெரியாமல் இறந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அது போல் அடிபட்டாலும் புண்கள் ஆறுவதில் சிக்கல் உள்ளது. எனவே சர்க்கரை நோய் வந்துவிட்டால் வாழ்க்கையே அவ்வளவுதான் என்றில்லை. அது இன்சுலின் குறைபாடு அவ்வளவுதான். இதற்கு மருத்துவரை அணுகி மருந்து மாத்திரை உட்கொள்ளுதல், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சிகளை செய்வது உள்ளிட்டவைகளால் இந்த குறைபாட்டை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
எந்த ஒரு அறுவை சிகிச்சை என்றால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருந்தால் மட்டுமே செய்வார்கள். எனவே சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.