Tamizhagaseithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

48,000க்கும் மேலான பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்

11 ஜூலை 2026
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது முதிர்வு காரணமாக மைசூரில் காலமானார்.

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியான எஸ். ஜானகி ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

மைசூரில் 88 வயதில் அவர் காலமாகியுள்ளதாக அவரது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த எஸ். ஜானகி, 1957இல் ‘விதியின் விளையாட்டு’ என்ற திரைப்படத்தில் பாடியதன் மூலம் தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு தான் திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, தனது சொந்த ஊருக்குத் திரும்பினார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநில அரசுகளிடம் இருந்து அவர் 33க்கும் மேற்பட்ட மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.

தனது தனித்துவமான குரலால் இந்திய இசைத் துறையில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய எஸ். ஜானகியின் மறைவு, இசையுலகில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சிறுவயது முதலே இசையில் தீவிர ஆர்வம்

இசைக் குயில் என்று மொத்த தென்னிந்திய திரையுலகமும் கொண்டாடும் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லபட்லா என்ற ஊரில், 1938 ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி ராமமூர்த்தி-சத்தியவதி தம்பதிக்கு மகளாகப் பிறந்தார்.

சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் இருந்ததால், நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்ற இவர் அகில இந்திய வானொலி 1956இல் பாட்டுப் போட்டி ஒன்றை நடத்தியபோது அதில் கலந்துகொண்டு, அப்போதைய ஜானாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடம் பரிசு பெற்றார்.

ஏவி.எம்.ஸ்டூடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக இருந்த இவருக்கு தமிழில் முதன்முதலாக பின்னணிக் குரலில் பாடக்கூடிய வாய்ப்பு, ‘விதியின் விளையாட்டு’ என்ற படத்தில் கிடைத்தது.

டி.சலபதிராவ் இசையில் அவர் பாடிய அந்தப் பாடல் அடுத்த நாளே, கண்டசாலாவுடன் சேர்ந்து ஒரு தெலுங்கு பாடலைப் பாடுவதற்கான வாய்ப்பைப் பெற்று தந்தது. அறிமுகமான முதல் வருடத்திலேயே ஆறு மொழிகளில் நூறு பாடல்களைப் பாடி புதிய சாதனையைப் புரிந்தார்.

ஜானகியின் வாழ்க்கையில், ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படம் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையில் காரு குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வர இசையோடு இணைந்து இந்தப் படத்திற்காக இவர் பாடிய, ‘சிங்காரவேலனே தேவா…’ என்ற பாடல் மிகவும் பிரபலமடைந்தது.

இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்த அந்தப் பாடலைத் தொடர்ந்து ஜானகிக்கு பரவலாக வாய்ப்புகள் வந்தாலும் தமிழில் அவரை புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்ற படம் என்றால் அது இளையராஜா இசையில் இவர் அன்னக்கிளி திரைப்படத்தில் பாடிய பாடல்கள்தான்.

அந்தப் படத்திற்காக இவர் பாடிய எல்லா பாடல்களுமே ஹிட் பாடல்கள் என்றாலும் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்று தொடங்கும் பாடல் இவருக்குத் தனியொரு அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம், வங்காளி, சமஸ்கிருதம், ஒரியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கினி, துளு, சௌராஷ்டிரா, ஜெர்மன், படுகா, பஞ்சாபி என 1 7 மொழிகளில் சுமார் 48,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

ஐந்து வயது குழந்தையின் குரலிலும், அறுபது வயது முதியவரின் குரலிலும் குரலை மாற்றிப் பாடக் கூடிய திறமையும் இவருக்கு உண்டு.