Tamizhagaseithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

அரசு ஒதுக்கீட்டில் 461 இடங்கள் குறையுமா? தனியார் மருத்துவ கல்லூரி விவகாரத்தில் திமுக மீதான அமைச்சர் குற்றச்சாட்டின் பின்னணி

மோகன்
பதவி,பிபிசி தமிழ்
பிரசுரிக்கப்பட்டது
14 ஜூலை 2026

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறுவதால் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் 400-க்கும் மேற்பட்ட இளங்கலை மருத்துவ இடங்கள் பறிபோவதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

முந்தைய திமுக அரசால் தான் இந்தச் சூழ்நிலை உருவாகியிருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் “அரசு இடங்கள் பறிபோகக் கூடாது என்பது தான் திமுக அரசின் நிலைப்பாடாக இருந்தது. அதனால் தான் தடையில்லா சான்று கேட்ட எந்த ஒரு விண்ணப்பத்திற்கும் திமுக ஆட்சிக் காலத்தில் அனுமதி வழங்கப்படவில்லை” என்கிறார்.

அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் குறைவதால் மருத்துவம் படிக்க விரும்பும் ஏழை, எளிய, நடுத்தர வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு எந்த வகையில் இழப்பு ஏற்படும்? கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

சர்ச்சை தொடங்கியது எப்போது?

தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

இது தொடர்பாக கே. அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எதிர்வினையாற்றி உள்ள நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜும் இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார்.

அமைச்சரின் குற்றச்சாட்டு என்ன?

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அருண்ராஜ், “யூஜிசி விதிப்படி 60 நாட்களுக்குள் பதிலளிக்கவில்லை என்றால் தடையில்லா சான்று வழங்கப்பட்டதாக அர்த்தம். ஆனால் இது தெரிந்தும் கடந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

அமைச்சரின் கூற்றுப்படி, இதனால் 461 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து வெளியே செல்கிறது. இதனால் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் 35 இடங்களும் பறிபோகும் நிலை உள்ளது.

மேலும் பேசிய அருண்ராஜ், “நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற கல்லூரிகளில் தனலட்சுமி ஶ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி, ஶ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி இரண்டு கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் வருவதால் அவர்கள் நேரடியாக விண்ணப்பித்தனர். ஓசூரில் புனித பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கும் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அந்தஸ்து அந்த மேல்முறையீட்டின் தீர்ப்புக்கு உட்பட்டதாக இருக்கும்.

அவை போக கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி ஜூன் 2023-இல் விண்ணப்பித்திருக்கிறார்கள். ஆனால் அப்போதைய திமுக அரசுக்கு மூன்று மாதம் கழித்து என்ஓசி கொடுத்திருக்கிறார்கள். அதற்கு இரண்டு மாதங்கள் கழித்து அந்த என்ஓசியை திரும்பவும் பெற்றிருக்கிறார்கள். அந்தக் கல்லூரி நிர்வாகம் நீதிமன்றம் சென்றபோது 60 நாட்களில் தடையில்லா சான்று கொடுக்கப்படாததால் அது தாமாகவே வழங்கப்பட்டதாக அர்த்தம் என்று தீர்ப்பளித்தது. முந்தைய திமுக அரசு அதனை எதிர்த்து மேல்முறையீடும் செய்யவில்லை. அதற்கும் எதிராக நீதிமன்றம் செல்ல இருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.

இந்த நான்கு கல்லூரிகள் போக மேலும் இரண்டு கல்லூரிகளும் விண்ணப்பித்திருந்ததாகவும் அந்த விண்ணப்பங்களுக்கும் 60 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படவில்லை என்றும் அருண்ராஜ் கூறினார்.