தவெக இன்னொரு திமுக : கரூர் 3,084 ஏக்கர் இனாம் நில விவகாரத்தில் பாஜக, இந்து அமைப்புகள் எதிர்ப்பு
விஜயானந்த் ஆறுமுகம்
பதவி,செய்தியாளர், தமிழ்
பிரசுரிக்கப்பட்டது
14 ஜூலை 2026
கரூர் மாவட்டத்தில் நான்கு கோவில்களின் கட்டுப்பாட்டில் இருந்த 3,084 ஏக்கர் நிலங்களில் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தமிழக இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு உத்தரவால் 15 கிராமங்களில் 471 சர்வே எண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் விலகிவிட்டதாகக் கூறும் விவசாயிகள், ’15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது” என்கின்றனர்.
ஆனால், சட்டத்துக்கும் அறத்துக்கும் புறம்பாக இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டுள்ளதாக பா.ஜ.க விமர்சித்துள்ளது. என்ன பிரச்னை?
பின்னணி
கரூர் மாவட்டத்தில் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் (புகழிமலை), கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், ரவீஸ்வரர் கோவில் (குப்புச்சிபாளையம்), விக்ருதீஸ்வரர் கோவில் (வெஞ்சமாங்கூடலூர்) ஆகிய கோவில்கள் உள்ளன.
இந்த நான்கு கோவில்களுக்கு 15 கிராமங்களில் 471 சர்வே எண்களில் 3084 ஏக்கர் நிலம் உள்ளதாகக் கூறி கடந்த 2007 ஆம் ஆண்டு அறநிலையத்துறையின் (பத்திரப்பதிவு தடை) பிரிவில் சேர்க்கப்பட்டது.
அரசின் உத்தரவால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானோம். கல்விக் கடன் பெறவோ, நிலத்தைக் காட்டி பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்வதோ அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை” என்கிறார், வெஞ்சமாங்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ்.
இவருக்கு இதே கிராமத்தில் ஒன்பது ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் நெல், தென்னை விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
மூத்த பெண்ணுக்கு திருமணம் நடந்துவிட்டது. நிலத்தின் மீது எந்த உரிமையும் இல்லாததால் திருமணம் நடப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. என்னைப் போல எங்கள் கிராமத்தில் சுமார் ஐந்தாயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்” என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
2007 ஆம் ஆண்டு கடிதத்தால் சிக்கல்
இந்த நிலங்களில் பத்திரப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 3.11.2007 அன்று இந்துசமய அறநிலையத்துறை சிறப்பு ஆணையர் எழுதிய கடிதத்தில், ‘சொத்துகள் தொடர்பான ஆவணங்களைப் பதிவு செய்ய வேண்டாம்’ என சார் பதிவாளர்களுக்கும் மாவட்ட பதிவாளருக்கும் அறிவுறுத்தியிருந்தார்.
இதனைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கரூர் மாவட்ட ஆட்சியர், ‘கோவில் நிலங்களைப் பட்டியலிடும்போது இனாம் தூய பதிவேட்டின் அடிப்படையில் இனாம் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் தனி நபர்கள் பெயரில் பட்டாக்கள் வழங்கப்பட்ட நிலங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு கோவிலின் சொத்தாக பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது’ என்கிறார்.
‘கோவில் பெயரில் இல்லாத ஆனால் மைனர் இனாம் ஒழிப்புச் சட்டத்துக்குப் முன்பு கோவில் பெயரில் தாக்கலாகி பின்னர் தனிநபர்கள் பெயரில் ரயத்துவாரி பட்டா நிலங்கள் அனைத்தும் ‘Prohibitory Module எனப் பதிவு செய்யப்பட்டு பத்திரப்பதிவு செய்வது தடுக்கப்பட்டது’ என்கிறார், மாவட்ட ஆட்சித் தலைவர்.
இந்தத் தடையை நீக்கக் கோரி கரூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வரப்பெற்றதைத் தொடர்ந்து வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள், உதவி ஆணையர்கள் அடங்கிய குழுவால் ஆய்வு செய்யப்பட்டதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
எந்தெந்த நிலங்களுக்கு சிக்கல் இல்லை?
கரூர் மாவட்ட ஆட்சியர் தனது கடிதத்தில், பத்திரப்பதிவுத் துறையில் இருந்து தடை செய்யப்பட்டிருந்த சர்வே எண்களை பின்வருமாறு வகைப்படுத்தப்படுத்தியுள்ளார்.
இனாம் ஒழிப்புச் சட்டத்துக்கு முன்பாக கோவில் பெயரில் தாக்கலாகி செட்டில்மென்ட் பதிவேட்டிலும் யுடிஆர் பதிவேட்டிலும் கணினி வழி ‘அ’ பதிவேட்டிலும் பட்டா தாக்கல் ஆகி உள்ள நிலங்கள்.
தனி நபர்கள் பெயரில் பட்டா தாக்கலாகி இருப்பினும் உரிமையியல் மற்றும் உயர் நீதிமன்ற வழக்குகளில் இடம்பெற்றுள்ள நிலங்கள்
இதர சந்தேகத்துக்குரிய நிலங்கள்
அரசு புறம்போக்கு நிலங்கள்
இவற்றில், கோவில் பெயரில் பட்டா தாக்கலாகி இனாம் செட்டில்மென்ட்டின் கீழ் தனிநபர்கள் பெயரில் ரயத்துவாரி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ள புல எண்கள், இணைய வழி ‘அ’ பதிவேட்டின் மூலம் சரிபார்க்கப்பட்டு நிலங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக, மாவட்ட ஆட்சியரின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
‘ஆவணங்களை பரிசீலனை செய்தபோது சுமார் 3084 ஏக்கர் பட்டா நிலங்களுக்கு பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்யலாம்’ எனப் பரிந்துரை செய்வதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதத்துக்கு அதேநாளில் (ஜூலை 9) பதில் அளித்துள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி.வினய், வருவாய்த்துறை ஆவணங்களின் அடிப்படையில் நிலங்கள் மீதான தடையை நீக்கம் செய்வதற்கு கோவில் செயல் அலுவலர்களை அறிவுறுத்துமாறு, மண்டல இணை ஆணையருக்கு உத்தரவிட்டார்.
அறநிலையத்துறையின் இந்த உத்தரவுக்கு இந்து அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.