பெருந்துறை சிப்காட் குடிநீர் மற்றும் சிடிஇபி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர்கள் கலந்து கொண்டனர்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் சிப்காட் குடிநீர் மற்றும் சிடிஇபி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சிப்காட் தொழிற்பேட்டை கூட்ட அரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கைத்தறி, துணி நூல் மற்றும் Smartphone அமைச்சர் ம.விஜய் பாலாஜி , மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வி,கே.ராஜீவ் ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி , முன்னிலையில் பெருந்துறை சிப்காட் தொடர்பான குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சிப்காட் நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் CETP பணிகளின் முன்னேற்றம், ஈங்கூர் குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு CSR நிதி பெறுதல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், பெருந்துறை சிப்காட் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஈங்கூர், வரப்பாளையம், வாய்பாடி, முகாசிபாளையம், புஞ்சை பாலத்தொழுவு மற்றும் சிறுகடுத்து ஆகிய ஊராட்சிகளில் ஆழ்குழாய் கிணறுகளில் நீர் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்களுக்கு தற்போது சென்னிமலை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு நிரந்தரத் தீர்வாக, சிப்காட் நிறுவனத்தின் தற்போதைய குடிநீர் வழங்கல் திட்டத்தை மேம்படுத்தி, தினமும் 3.00 MLD (30 லட்சம் லிட்டர்) குடிநீர் வழங்கும் வகையில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் புனரமைத்தல், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீரேற்று அறைகள் அமைத்தல், பம்ப் செட்டுகள் மற்றும் குழாய்கள் அமைத்தல், தெருவிளக்கு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, சாயப்பட்டறை, டையிங் அசோசியேஷன் மற்றும் சிப்காட் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் தொழில் சார்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
நீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் விரைந்து முடிக்கவும், தேவையான தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை ஈடுபடுத்தவும், கட்டுமானப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பணிகளின் தரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றி, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பணிகளை விரைந்து முடித்து, பணி முன்னேற்ற அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்க அறிவுறுத்தினார்கள்.
தொடர்ந்து, சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், கைத்தறி, துணி நூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் அவர்கள், மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ஆகியோர் புதியதாக கட்டப்பட்டு வரும் CETP பொது சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வின் போது, ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கா.க.ஆனந்த் மோகன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜ்குமார், மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர் லாவண்யா, சிப்காட் திட்ட அலுவலர் சுஜா பிரியதர்ஷினி, சிப்காட் செயற்பொறியாளர் பசுபதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமா சங்கர், சிப்காட் அலுவலர்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.