பழனி முருகன் கோவில் மடத்தின் நில முறைகேடு வழக்கில் என்ன நடந்தது?பின்னணி விவரம்
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்
விஜயானந்த் ஆறுமுகம்
பதவி,செய்தியாளர்
பிரசுரிக்கப்பட்டது
15 ஜூலை 2026
புதுப்பிக்கப்பட்டது 19 ஜூலை 2026
பழனி மலை அடிவாரத்தில் தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான நிலத்தை தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ததாக, 4 பேர் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலத்தைப் பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரில், சார்-பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
நிலத்தை வாங்கிய தனிநபர்கள் அமைச்சரின் உறவினர்கள் என, வெளியான தகவலை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மறுத்துள்ளார். “புதிதாக எனக்கு ஓர் உறவினரை உருவாக்கி அவதூறு பரப்பியவர்கள் மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்.
சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தில் முறைகேடு நடைபெற்ற பின்னணி என்ன?
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மலையின் அடிவாரத்தில் உள்ள பூங்கா சாலையில் தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம் உள்ளது.
'1888 ஆம் ஆண்டு நிலம்'
குப்புசாமி மணியக்காரர் என்பவருக்கு சொந்தமாக இந்த நிலம் இருந்துள்ளது. ‘அவர் தண்டாயுதபாணி சுவாமி என்பவருக்கு 26.4.1888 ஆம் ஆண்டு மடம் கட்டவும் இந்துமத கோட்பாடுகளை பரப்பவும் அனுசரிக்கவும் தர்ம சாசனத்தின் மூலமாக எழுதிக் கொடுத்தார்’ என, ஜூலை 2 ஆம் தேதி பழனி கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, பழனி 1-ம் எண் இணை பதிவாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தண்டாயுதபாணி மடம், பல்வேறு நபர்களால் அபிவிருத்தி செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கும் கோவிலில் பூஜை செய்வதற்கும் நிர்வாகம் செய்யப்பட்டுள்ளதாக, கடிதத்தில் செ.மாரிமுத்து குறிப்பிட்டுள்ளார்.
‘மடத்துக்கு கொடுக்கப்பட்ட 1.40 ஏக்கர் நிலத்தில் இருந்து வரும் வருமானத்தை மடத்தின் பராமரிப்பு மற்றும் பூஜை, கைங்கர்ய செலவு ஆகியவற்றுக்கு செய்து வரவும் அந்தச் சொத்துகளை எவருக்கும் விற்பதற்கோ, வில்லங்கப்படுத்தவோ உரிமை கொடுக்கப்படவில்லை’ என கோவிலின் இணை ஆணையர் செ.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.