கோவை இளைஞர் பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாக 15 ஆண்டுகள் சிக்கியிருந்து, மீண்டது எப்படி?
சேவியர் செல்வக்குமார்பதவி,செய்தியாளர், தமிழ் மற்றும் எழுதியவர்,ஹர்மன்தீப் சிங்பதவி,செய்தியாளர், பஞ்சாபி
17 ஜூலை 2026
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இருக்கும் தகவல்கள் சங்கடம் தரலாம்.
என் மூத்த பையன் எப்பவோ இறந்து போயிருப்பான்னு நினைச்சேன். அவனை நினைச்சு நான் அழாத நாளே இல்லை. 23 வருஷம் கழிச்சு, திடீர்னு என் பையன் உயிரோட இருக்கான்னு தெரிஞ்சதும் நான் அடைந்த சந்தோஷத்தை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து அவனுடன் போனில் பேசியபோது வெடித்து அழுதுவிட்டேன்.
கணவரை இழந்துள்ள சுந்தரி, 23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் உயிருடன் இருப்பதைப் பற்றி பிபிசியிடம் பேசியபோது அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கியிருந்தன.
யார் இந்த தாய்? காணாமல் போன அந்த மகன் எங்கு இருந்தார், எப்படி கண்டறியப்பட்டார்?
மகன் இறந்துவிட்டதாக நினைத்திருந்த தாய்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 13ஆம் தேதி திங்கள் கிழமையன்று நடந்த மக்கள் குறை கேட்புக் கூட்டத்தில், கோவை நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரி (வயது 68), மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனைத் தன்னிடம் மீண்டும் சேர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டுமெனக் கோரியிருந்தார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிலுள்ள பூமாலைப்பட்டி ஆனைக்குளம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. அவருடைய மனைவி சுந்தரி. இந்த தம்பதிக்கு பிரகாசம், பிரபு என இரு மகன்கள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன், பிழைப்புக்காக இந்தக் குடும்பம் கோவைக்குக் குடிபெயர்ந்துள்ளது.
இவர்களின் மூத்த மகன் பிரகாசம், மூன்றாம் வகுப்பு வரை கவுண்டம்பாளையம் மாநகராட்சிப் பள்ளியிலும், சாய்பாபா காலனியில் இருக்கும் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பையும் படித்திருக்கிறார். அதன் பிறகு அவர் பள்ளிக்குச் செல்லவில்லை. கடந்த 2003ஆம் ஆண்டில் சிறு கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய பிரகாசம் வீடு திரும்பவே இல்லை
இளைய மகன் பிரபுவுடன் அவரது தாய் சுந்தரி
பிபிசி தமிழிடம் அதை நினைவுகூர்ந்து பேசிய சுந்தரி, ”அவனுக்கு படிப்பு வரவில்லை. வீட்டில்தான் இருந்தான். இரு மகன்களுக்கும் ஒரு வயது வித்தியாசம்தான். அதனால் பல விஷயங்களில் அவர்களுக்குள் சண்டை வரும். அப்போது வீட்டு உபயோகத்துக்காக ஒரு டூவீலர் வாங்கியிருந்தோம். அதை யார் ஓட்டுவது என்பதில் சண்டை ஏற்பட்டது. சின்னவன் அது தனது வண்டி எனக் கூறியதால் மூத்தவன் சண்டை போட்டு வீட்டைவிட்டுச் சென்றுவிட்டான். எங்கே தேடியும் அவன் கிடைக்கவில்லை,” என்றார்.
சுந்தரியின் கூற்றுப்படி, ”போலீசில் புகார் கொடுத்தோம். இரு மாதம் கழித்து, எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள மளிகைக் கடை தொலைபேசிக்கு அழைத்துப் பேசிய அவன், சென்னையில் இருப்பதாக தகவலை மட்டும் கடைக்காரரிடம் கூறிவிட்டு வைத்துவிட்டான். எங்களிடம் பேசவில்லை. அப்போது அவனுக்கு 16 வயது. விவரம் தெரிந்த வயது என்பதால் தானாக வந்து விடுவான் எனக் கருதினோம், ஆனால் வரவில்லை. எங்கிருக்கிறான் என்ற தகவலும் தெரியவில்லை. அவனைக் கண்டுபிடிக்க பல வழிகளில் எடுத்த முயற்சிகள் எதுவுமே பலன் தரவில்லை.”
சில ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டம்பாளையத்தில் இருந்து நீலாம்பூர் பகுதிக்கு இவர்கள் குடிபெயர்ந்துள்ளனர். எலக்டிரிக்கல் உதவியாளர், வாட்ச்மேன் போன்ற பணிகளைப் பார்த்து வந்த ராமமூர்த்தி, 2021இல் புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார். பிறகு சுந்தரி, ஆச்சாங்குளம் பகுதியில் விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து குறைந்த அளவில் காய்கறி விவசாயம் செய்வதோடு, சில மாடுகளையும் பராமரித்து வருகிறார். அவருடன் இளைய மகன் பிரபு இருக்கிறார்.
” சாலையில் யாராவது படுத்துக் கிடந்தால் அது என் மூத்த மகனாக இருக்குமோ என்று பக்கத்தில் போய்ப் பார்ப்பேன். எந்த ஊருக்குப் போனாலும் எங்கேயாவது அவன் தென்படமாட்டானா என்று கண்கள் தேடும். கடந்த மாதம் எங்களைப் பார்க்க முத்தையா என்ற பத்திரிகையாளர் வந்தார். அவர்தான் பிரகாசம், பஞ்சாபில் ஒரு காப்பகத்தில் இருப்பதாகவும் கொத்தடிமையாக இருந்த அவரை மீட்டு அங்கு வைத்துள்ளதாகவும் கூறினார். என்னால் அதை நம்பவே முடியவில்லை. அவர் என் மகனின் போட்டோவை காண்பித்த பிறகே எனக்கு நம்பிக்கை வந்தது ” என்றார் சுந்தரி.
பஞ்சாபை சேர்ந்த சுபாஷ் சந்தர் என்பவர் அளித்த தகவலின்பேரில், மூன்று ஆண்டுகளாக பிரகாசத்தின் குடும்பத்தினரைத் தேடுவதற்காக ஏராளமான முயற்சிகளை எடுத்ததாக பிபிசியிடம் பேசியபோது விளக்கினார் பத்திரிகையாளர் முத்தையா.
மேலும் பேசிய அவர், ”என் அண்ணனின் நண்பரான சுபாஷ் சந்தர், ஹரியாணா மாநில சட்டப் பேரவையில் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர்தான் ஒரு காப்பகத்தில் பிரகாசத்தை பார்த்து, அவர் கூறிய விவரங்களைக் கூறி, அவருடைய குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க உதவுமாறு கூறினார். அண்ணன் மூலமாக இதையறிந்து, சுபாஷ் மூலமாக பிரகாசத்திடம் பேசிய பின் அவரது குடும்பத்தைத் தேடத் தொடங்கினேன்” என்றார்.