தமிழ்நாடு எங்கே.. ஸ்டாலின் அமெரிக்காவில் இருக்கும் போதே.. அன்புமணியிடம் இருந்து அப்படி ஒரு கேள்வி
சென்னை:
தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது என்றும், இந்த சூழலில் முதலீடு குவிவதாக கூறுவதெல்லாம் வெறும் மாயை தானா? என பாக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். கேரள மாநிலம் மொத்தம் 9 சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி முதல் இடத்தைப் பிடித்திருப்பதாகவும் அன்புமணி கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 30 வகையான சீர்திருத்தங்களில் ஒவ்வொரு மாநிலமும் எத்தனை சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறது என்பதன் அடிப்படையில் இத்தகைய தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது.
கேரள மாநிலம் மொத்தம் 9 சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆனால், தமிழ்நாடு ஒரே ஒரு சீர்திருத்தத்தைக் கூட செய்யாததால் , அத்தகைய சீர்திருத்தங்களை மேற்கொண்ட 17 மாநிலங்கள் பட்டியலில் இடம் பெற முடியவில்லை. தமிழகத்தின் இந்த நிலை அதிர்ச்சியளிக்கிறது.
தொழில்களைத் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலம் என்று கூறப்படும் கேரளம் சில ஆண்டுகளுக்கு முன் 28-ஆம் இடத்தில் இருந்தது. அதிலிருந்து முதலில் 15-ஆம் இடத்திற்கு வந்த கேரளம் இப்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆந்திரம், குஜராத், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அடுத்த 3 இடங்களை கைப்பற்றியுள்ளன. கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் கூட இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டும் இடம் கிடைக்காதது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.