குப்பையில் கிடக்கும் தங்கம்! பூச்சிக்கடிக்கு அருமருந்து! குப்பைமேனியை பயன்படுத்துவது எப்படி?
சென்னை:
குப்பைமேனி செடியின் இலைகளால் எடுக்கப்படும் சாறு எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது. பூச்சிக்கடி எவ்வாறு வைத்தியமாகிறது என்பதை பார்க்கலாம்.
தப்புச் செடி போல் ஆங்காங்கே வளர்ந்திருக்கும். இதன் இலையை பிழிந்தெடுக்கும் சாறானது பல்வேறு சரும நோய்களுக்கும் பூச்சிக் கடிகளுக்கும் மருந்தாக அமைகிறது. இந்த செடி தற்போது நகரங்களில் கூட ஆங்காங்கே முளைத்திருக்கிறது.
இதன் இலை, வேர், சாறு என அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. குப்பைமேனி தழையின் முக்கிய உடல்நலப் பயன்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
1. தோல் நோய்களுக்கு சிறந்த மருந்து
குப்பைமேனியின் மிக முக்கியப் பயனே தோல் நோய்களைக் குணப்படுத்துவதுதான். இதில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு (Anti-fungal) குணங்கள் தோலுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றன.
சொறி, சிரங்கு, படர்தாமரை: குப்பைமேனி இலைகளுடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து, தோல் நோய்கள் உள்ள இடத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால் அரிப்பு, சொறி, சிரங்கு, படர்தாமரை போன்றவை விரைவாகக் குணமாகும்.
பருக்கள் மற்றும் தழும்புகள்: முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் இந்த இலையின் சாற்றைத் தடவி வர, பருக்கள் குறைவதோடு அதன் தழும்புகளும் மறையும்.
2. கபம் மற்றும் இருமல் நீங்க
நெஞ்சுச் சளி, தீராத இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு இது நல்ல பலன் தரும்.
குப்பைமேனி இலைச் சாற்றைக் குறைந்த அளவில் (சிறியவர்களுக்கு சில துளிகள், பெரியவர்களுக்கு ஒரு தேக்கரண்டி) தேனுடன் கலந்து சாப்பிட்டு வர, நெஞ்சில் கட்டியிருக்கும் கபம் (சளி) உருகி வெளியேறும்.
தொடர் இருமலால் அவதிப்படுபவர்களுக்கு இலைச் சாறு சிறந்த நிவாரணம்.
3. பூச்சிக் கடிகளுக்குத் தீர்வு
தேள், பூரான், வண்டு போன்ற விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால், அந்த இடத்தில் உடனடியாகக் குப்பைமேனி இலையை அரைத்துத் தடவினால், விஷம் முறிவதோடு வலியும் வீக்கமும் குறையும்.