Tamizhagaseithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

முருக வழிபாடு தமிழகம் மற்றும் வட இந்தியாவில் எவ்வாறு வேறுபடுகிறது? தெலுங்கு பட சர்ச்சையால் புது விவாதம்

விஜயானந்த் ஆறுமுகம்
பதவி,செய்தியாளர், தமிழ்
பிரசுரிக்கப்பட்டது
11 ஜூலை 2026
புதுப்பிக்கப்பட்டது 12 ஜூலை 2026

சமீபத்தில், ‘வட இந்தியாவில் பிறந்தவர்’ என்று முருகக் கடவுள் குறித்து தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் நாகவம்சி வெளியிட்ட எக்ஸ் பதிவு, தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

“வரலாற்றைத் திரித்து தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

நாக வம்சியின் பதிவுக்கு சைவ சிந்தாந்த அறிஞர்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், ஒரு தெலுங்கு ஊடகத்திற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த சர்ச்சை குறித்து நெறியாளர் நாகவம்சியிடம் கேள்வி எழுப்பியபோது, “நான் இந்த விஷயத்தை புறந்தள்ளிவிடவில்லை. நான் உடனடியாக அவசரகதியில் இதற்குப் பதிலளிக்க விரும்பவில்லை. என் விளக்கம் சரியான நேரத்தில் வரும்,” என்று மட்டும் அவர் பதிலளித்துள்ளார்.

ஆனால், இதுகுறித்து அவரது விளக்கத்தை அறிய பிபிசி தமிழ் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

உண்மையில், தமிழ்க் கடவுளாகப் பார்க்கப்படும் முருகன், வட இந்தியாவில் எவ்வாறு வழிபடப்படுகிறார்?

சர்ச்சைக்கு வித்திட்ட புதிய பட அறிவிப்பு

இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ‘காட் ஆஃப் வார்’ என்ற தலைப்பில் படத்தின் டீசர் காட்சிகள் வெளிவந்தன.

படம் தொடர்பான அறிவிப்பைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட தயாரிப்பாளர் நாகவம்சி, “வடக்கில் பிறந்து, மையப் பகுதியில் உருப்பெற்று, தெற்கில் போற்றப்பட்டு… இப்போது, ​​பிரபஞ்சத்திற்கே சொந்தமாக இருக்கும் ஒரு காவியம்” எனப் பொருள்படும் வகையில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நாகவம்சியின் இந்தப் பதிவு தமிழ்நாட்டில் விவாதத்திற்குரிய பேசுபொருளாக மாறியது.

'தவறாக கட்டமைக்கக் கூடாது' - சீமான்

கலைப் படைப்பு என்ற பெயரில் அடிப்படைப் புரிதலின்றி இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மை எனக் கட்டமைக்க முயல்வது கண்டனத்துக்குரியது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார்.

ஜூலை 4ஆம் தேதி சீமான் வெளியிட்ட அறிக்கையில், “ஐவகைத் திணைகளில் ஒன்றான குறிஞ்சித் திணையின் தலைவன் முருகனை முப்பாட்டன் என அழைத்து வணங்கிப் போற்றுவது தமிழரின் மரபுசார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறை” எனக் கூறியுள்ளார்.

“தமிழ்தான் முருகன், முருகன்தான் தமிழ். இரண்டும் பிரிக்க முடியாதது. தமிழர் இறையோன் முருகன் என்பது எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்த ஒன்று. அதைத் தவறாகக் கட்டமைத்து இழிவுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை” எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.

தொல்காப்பியம் தொடங்கி திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் பலவும் சேயோன், செவ்வேள், சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு எனப் பல செந்தமிழ்ப் பெயர்களால் முருகனைப் போற்றியதாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பக்தி இலக்கியங்களும் முருகனைப் போற்றுவதாகக் கூறியுள்ள சீமான், “சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாட்டு என்ற தொல்குடி மக்களின் சடங்கு குறித்து குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும்” குறிப்பிட்டார்.

நாம் தமிழர் கட்சியின் எதிர்ப்பு தொடர்பாக, தயாரிப்பாளர் நாகவம்சியோ படக்குழுவோ இதுவரை அதிகாரபூர்வமாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. நாகவம்சி தரப்பு விளக்கத்தை அறிய பிபிசி தமிழ் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.