Tamizhagaseithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

'19 இடங்களில் காயங்கள்'; கன்னியாகுமரி மாற்றுத் திறனாளி இளைஞர் சிறையில் உயிரிழப்பு - என்ன நடந்தது?

நாகர்கோவிலில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த சபரிவர்மன்

விஜயானந்த் ஆறுமுகம்
பதவி,செய்தியாளர், தமிழ்
பிரசுரிக்கப்பட்டது
15 ஜூலை 2026
புதுப்பிக்கப்பட்டது 16 ஜூலை 2026

இதற்கு முன்பு அவன் மீது எந்த வழக்குகளும் இல்லை. ஒருமுறை கூட சிறைக்குப் போனதில்லை. அவனுக்கு யாருடனும் பகை இல்லை. மாற்றுத் திறனாளியான அவனுக்குப் பிறவியிலேயே வலது கை செயல்படவில்லை. யாராவது அடித்தாலும் வாங்கிக் கொள்வான்”

நாகர்கோவிலில் நீதிமன்றக் காவலில் சிறையில் இருந்தபோது உயிரிழந்த சபரிவர்மனின் சகோதரி பிபிசி தமிழிடம் வேதனையோடு இவ்வாறு கூறினார்.

கைதி உயிரிழந்த விவகாரத்தில் மூன்று சிறைக் காவலர்களும், 8 சிறை கைதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐ.ஜி விஜயேந்திர பிதாரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கைதியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும் பொதுமக்களும் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘த.வெ.க ஆட்சியின் முதல் காவல் மரணம் இது’ என மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.

கன்னியாகுமரி, ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன், தனது வீட்டை ஒட்டியுள்ள இடத்தில் பெட்டிக் கடை ஒன்றை நடத்தி வந்தார்.

பி.இ பொறியியல் படிப்பில் அரியர்ஸ் இருந்ததால் வேறு வேலைக்கு அவனால் செல்ல முடியவில்லை. இதனால் என்னுடைய அப்பா நடத்தி வந்த பெட்டிக்கடையை சபரிவர்மன் நடத்தி வந்தான்,” என்கிறார், அவரது சகோதரி கிருஷ்ண கவுதமி.

கைதானபோது என்ன நடந்தது?

கிருஷ்ண கவுதமியும் பிறவியில் இருந்து வலது கை செயல்படாத மாற்றுத் திறனாளியாக உள்ளார்.

“கடந்த வியாழக்கிழமை (ஜூலை 9) காலையில் சீருடை அணியாத ஐந்து போலீசார் என் தம்பி நடத்தி வரும் பெட்டிக் கடைக்கு வந்தனர். கடையில் அவர்கள் சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.” என்கிறார் கிருஷ்ண கவுதமி.

அதேநேரம், தன்னுடைய சொந்த பயன்பாட்டுக்கு சபரிவர்மன் வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்ததாக அவரது சகோதரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

“அதனைக் கையில் எடுத்த தெற்கு தாமரைக் குளம் காவல்நிலைய போலீஸார், இரு சக்கர வாகனத்தில் என் தம்பியைக் கூட்டிச் சென்றனர். அப்போது, ‘என்னுடைய ஆதார் அட்டையை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வா’ என மனைவியிடம் தம்பி கூறினான்” என்கிறார் கிருஷ்ண கவுதமி.

காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சபரிவர்மனை சொந்த பிணையில் விடுவித்துவிட்டாலும், அவரின் செல்போனை ஸ்டேஷனில் வாங்கி வைத்துக் கொண்டதாக கிருஷ்ண கவுதமி குறிப்பிட்டார்.

சிறிது நேரத்தில், காவல்நிலையத்தில் இருந்து சபரிவர்மனின் மனைவியை தொடர்பு கொண்ட போலீஸார், ஸ்டேஷனுக்கு வந்து செல்போனை வாங்கிக் கொண்டு போகுமாறு கூறியுள்ளனர்.

“அதைக் கேட்டு என் தம்பி மட்டும் தனியாக காவல்நிலையம் சென்றார். பிறகு அங்கிருந்து வீட்டுக்குப் போன் செய்து, ‘என்னை ரிமாண்ட் செய்யப் போகிறார்கள். வேறு ஆடைகளை எடுத்து வா’ என மனைவியிடம் கூறினான்” என்கிறார் கிருஷ்ண கவுதமி.

இரவு சுமார் 8 மணியளவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சபரிவர்மனுக்கு மருத்துவப் பரிசோதனையை முடித்துவிட்டு, மாஜிஸ்திரேட் முன்பு போலீஸார் ஆஜர்படுத்தியுள்ளனர்.

அன்று இரவு சிறையில் நீதிமன்றக் காவலில் சபரிவர்மன் அடைக்கப்பட்டார்.

“அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லும்போது எங்கள் வழக்கறிஞரும் உடன் சென்றார். மறுநாள் (ஜூலை 10) மதியம் சுமார் 2 மணியளவில் தம்பி மனைவி, நான், வழக்கறிஞர் ஆகியோர் சிறையில் தம்பியைச் சந்தித்தோம்” என கிருஷ்ண கவுதமி தெரிவித்தார்.

இதைப் பற்றிப் பேசிய அவர், “அப்போது நன்றாக இருந்தான். காலையில் இரண்டு இட்லியும் மதியம் ரசம் சோறும் சாப்பிட்டதாகக் கூறினான். ‘யாரும் அடிக்கவில்லை’ எனக் கூறிவிட்டு, செவ்வாய், புதன்கிழமைக்குள் வெளியில் வந்துவிடுவதாகக் கூறினான்.” என்கிறார்.