Tamizhagaseithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

RNI:1359610/TNTAM24070

தமிழக செய்தி | Tamizhaga Seithi

தவெக எம்எல்ஏவின் ரூ.35 கோடி 'பேரம்' புகார்: டி.வி. நெறியாளர் விஜயன் விசாரிக்கப்பட்டதன் பின்னணி

விஜயானந்த் ஆறுமுகம்
பதவி,செய்தியாளர், தமிழ்
பிரசுரிக்கப்பட்டது
17 ஜூலை 2026
புதுப்பிக்கப்பட்டது 18 ஜூலை 2026

தவெக எம்எல்ஏ-விடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாகப் பதிவான வழக்கில் கைதான நபருடன் தொடர்பில் இருந்ததாக, தொலைக்காட்சி நெறியாளரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

நெறியாளரை காவல்துறை அலைக்கழித்ததாகக் கூறி பத்திரிகையாளர் சங்கங்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தவெக எம்.எல்.ஏ இளையராஜா, கடந்த 29ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், சில நாட்களுக்கு முன்பு திருநாவுக்கரசு என்பவர் ஒரு கருத்துக் கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் ஒரு முக்கியக் கட்சியைச் சேர்ந்த சிலர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் நேரில் சந்திக்க வேண்டும் எனவும் கேட்டதாகக் கூறியுள்ளார்.

ஆனால், தான் வேறு பணிகளில் இருப்பதாகக் கூறி அந்த இணைப்பைத் துண்டித்துவிட்டதாகப் புகார் மனுவில் கூறியுள்ள இளையராஜா, “இருந்தும் அந்த நபர் தன்னை மீண்டும் தொடர்புகொண்டு சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவுள்ளதாகப் பேசினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்போது தாங்கள் கூறும் வகையில் நடந்துகொண்டால் 35 கோடி ரூபாய் வரை தருவதாக பேரம் பேசியதாகவும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

“இதில் எனக்கு விருப்பமில்லை. இனிமேல் என்னிடம் பேசாதீர்கள்” எனக் கண்டிப்புடன் கூறிவிட்டதாகவும், இதுகுறித்து வெளியில் தெரிவித்தால் நானும் என் குடும்பத்தினரும் பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று மிரட்டப்பட்டதாகவும் இளையராஜா கூறியுள்ளார்.
தன்னிடம் பேரம் பேசிய நபர்கள் மீதும் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் நடந்து கொண்ட நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தனது புகார் மனுவில் கோரியிருந்தார்.

'வழக்கில் 12 பேர் கைது' - காவல்துறை

காவல்துறை புலன் விசாரணையில் திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், வழக்கில் கைதான நரேஷ் என்பவரை சென்னையில் சந்தித்துள்ளதாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோரின் அறிவுரையின்பேரில் கைதான திருநாவுக்கரசு வழக்கின் புகார்தாரரான இளையராஜாவை தொடர்புகொண்டு மேற்கூறிய செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.

தற்போது வரை இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஜூலை 15ஆம் தேதி சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வழக்கின் சாட்சி விசாரணைக்காக தொலைக்காட்சி நெறியாளர் விஜயனிடம் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தியது பேசுபொருளாக மாறியுள்ளது.